வீரப்பனைத் தேடுகிறோம், வீரப்பனைப் பிடிக்கிறோம் என்ற பெயரில் அதிரடிப்படை போலீசார் தமிழக- கர்நாடக எல்லைப் பகுதி கிராம மக்களை அடித்துத் துன்புறுத்தி சித்ரவதை செய்து கொடுமைப்படுத்தினார்கள். சொல்லொண்ணா வேதனைகளுக்கு ஆளாகி சதாசிவன் கமிட்டி மூலம் நிவாரணம் கிடைக்கப்பெற்ற மக்கள் இன்னும் அந்த நிவாரணம் முழுதாக வந்தடையவில்லை என்கின்றனர் பரிதாபமாக.

vv

வீரப்பனை தேடிப்பிடிப்ப தற்காக இரு மாநிலங்களைச் சேர்ந்த கூட்டு அதிரடிப்படை முயற்சி மேற்கொண்டு வந்த வருடங்களில் சேலம் மாவட்டம் மேட்டூர் தாலுகாவில் மலையை ஒட்டிய கிராமங்களைச் சேர்ந்த மக்கள் அதிரடிப் படையால், சொல்லமுடியாத ஒடுக்குமுறைகளுக்கு ஆளாகினர். கோவிந்தபாடி, செட்டிப்பட்டி, காவேரிபுரம், கருங்கல்லூர், பெரியதண்டா, நீதிபுரம் ஈரோடு மாவட்டம் தாளவாடி, சத்தியமங்கலம், அந்தியூர் தருமபுரி மாவட்டம் பென்னகரம், ஏரியூர் கர்நாடகா மாநிலம் கொல்லேகால் தாலுகாவில் கோபிநத்தம், மார்ட்டள்ளி, நெல்லூர், ஜல்லிபாளையம், சந்தனப்பாளையம் சுற்றியுள்ள மலைப்பகுதிகளில் வசித்து வந்த மக்களே இந்தக் கொடுமைகளுக்கு ஆட்பட்டனர்.

வீரப்பன் முகமே தெரியாதிருந்த சூழலில் வீரப்பன் யார் என அடையாளப்படுத்தியதோடு, கூட்டு அதிரடிப்படை போலீசாரின் அத்துமீறல் களுக்கு ஆளாகி கஷ்டம் அனுபவித்துவந்த தமிழ்நாடு, கர்நாடக மக்களின் துயரத்தையும் நக்கீரன் தொடர்ந்து அடையாளம் காட்டிவந்தது. 1993-ஆம் ஆண்டு அதிரடிப்படை காவலர்கள் விசாரணை என்ற பெயரில் குழந்தைகள், பெண்கள், வயதானவர்கள் என்று பாரபட்சம் பார்க்காமல் அழைத்துச்சென்று ஈவிரக்கமின்றி கடுமையாகத் தாக்கினார்கள். பலரை வீரப்பன் அணிந்திருக்கும் பச்சை யூனிஃபார்ம் போட்டு வீரப்பன் கூட்டாளி என்று சுட்டுக் கொன்றனர்.

கர்நாடக மாநிலம் மாதேஸ்வரன் மலையிலுள்ள முகாமில் தலைகீழாக கட்டிவைத்து அடிப்பது, மின்சாரத்தை உடம்பில் செலுத்துவது, பூட்ஸ் காலால் மிதிப்பது, காயத்தில் மிளகாய்ப்பொடி தெளிப்பது, பெண்களை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்வது, அப்படி பிறக்கும் குழந்தைகளை விஷ ஊசி செலுத்திக் கொல்வது, சித்ரவதை செய்தவர்களின் காயங்கள் ஆறியபிறகு வீரப்பன் கூட்டாளிகள் என தடா வழக்கு போட்டு நீதிமன்றத்தில் அடைப்பது என நடந்த கொடுமைகள் கொஞ்சநஞ்சமல்ல.

அதிரடிப்படை போலீசாரின் இந்த அத்துமீறல்களை தொடர்ந்து செய்தியாக வெளியிட்டது மட்டுமின்றி, டில்லியிலுள்ள மனித உரிமை ஆணையத்தில் நக்கீரன் சார்பில் புகாரும் கொடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், பழங்குடியின அமைப்புகள் சார்பாகவும் புகார் கொடுக்கப்பட்டு மலைமக்களுக்கு நேர்ந்த கொடுமைகள் பற்றி விசாரிக்க சதாசிவம் கமிட்டி அமைக்கப்பட்டது. விசாரணை கமிட்டி நீதிபதி சதாசிவம், மக்களை நேரடியாகச் சந்தித்து கோபிசெட்டிப்பாளையம், கொளத்தூர், மாதேஸ்வரன் மலையில் 6 அமர்வுகளாக விசாரணை மேற்கொண்டார். பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் எஸ்.டி.எஃப். அதிகாரிகள் என 300-க்கும் அதிகமானோர் தங்களின் வாக்குமூலங்களைப் பதிவுசெய்தனர்.

2007-ஆம் ஆண்டு கலைஞர் ஆட்சியில், பாதிக்கப் பட்ட சாட்சியங்களில் 89 நபர்களைத் தேர்வுசெய்து இரு மாநில அரசுகளும் 2.80 கோடி இடைக்கால நிவாரணம் கொடுத்தன. இடைக்கால நிவாரணம் கொடுத்து 14 ஆண்டுகள் ஆகிய நிலையில், பாதிக்கப்பட்ட மக்கள் ஒன்றுகூடி விடியல் மக்கள் கூட்டமைப்பு லக்கம்பட்டி என்ற பெயரில் முருகேசன் தலைமையில் சென்னை உயர்நீதிமன்றத் தில் மீதமுள்ள 7.20 கோடி நிவாரண பணத்தை வழங்கவேண்டும் என்று வழக்கு தொடர்ந்தார்கள். இந்த மனு கடந்த 13.03.2021-அன்று நீதிபதி அப்துல் குத்தூஸ்முன் விசாரணைக்கு வர, அரசு பதிலளிக்க உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் இவ்வழக்கை விசாரித்த நீதியரசர் மகாதேவன் தலைமைச் செயலாளருக்கு பதிலளிக்குமாறு உத்தரவு பிறப்பித்ததுடன், ஏன் இந்த மக்களுக்கு மீதமுள்ள நிதி வழங்கவில்லை, வழங்குவோம் என்றால் எப்போது? வழங்கமாட்டோம் என்றால் ஏன் என்பதை 4 வாரத்திற்குள் விசாரித்து விளக்கமளிக்கவேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார்.

இதையடுத்து இந்திய மாதர் சம்மேளன தலைவி ஆனிராஜா, முன்னாள் நன்னிலம் சட்டமன்ற உறுப்பினர் பத்மாவதி, பாதிக்கப்பட்ட அமைப்பின் விடியல் பீபிள் பவுண்டேசன் முருகேசன் ஆகியோர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டா லினை நேரில் சந்தித்துப் பேசினர். அப்போது முதல்வர் இந்த மனு மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்து இருந்தார்.

இதனையடுத்து அதிரடிப்படையால் பாதிக்கப்பட்ட மக்கள் பற்றி மேட்டூர் சப்-கலெக்டர் விசாரித்துள்ளார். கொளத் தூர் காவல்நிலைய இன்ஸ் பெக்டர் ஈரோடு அதிரடிப் படை இன்ஸ்பெக்ட,ர் சேலம் சி.பி.சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் ஆகியோர் சதாசிவம் கமிஷன் மூலம் இடைக்கால நிவாரணம் பெற்ற பயனாளிகளின் முழு விவரங்களையும் கேட்டு வாங்கிச்சென்றுள்ளனர்.

விடியல் அமைப்பின் முருகேசன், தலைமை செயலகத்தின் டெப்டி செகரட்டரி சித்ராவை தொடர்பு கொண்டு பேசிய நிலையில், "டிசம்பர் 20-ஆம் தேதி இது சம்பந்தமாக பேசி முடிவெடுத்துள்ளோம். தீர்மான நகல் கிடைக்கப் பெற்றவுடன் நல்ல முடிவு கிடைக்கும்'' என்கிறார் நம்பிக்கையாக.

-சுப்பு

படம் : ஸ்டாலின்